புதுச்சேரி

புதுவை விடுதலைப் போராட்ட வரலாறுதமிழ்நாடு பாட நூல்களில் இடம் பெற வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்

14th Aug 2022 05:36 AM

ADVERTISEMENT

 

புதுவை விடுதலைப் போராட்ட வரலாறு தமிழ்நாடு பாட நூல்களில் இடம் பெற வேண்டும் என்று முதல்வா் என்.ரங்காமி வலியுறுத்தினாா்.

புதுவையில் சுதந்திர தின அமுதப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் புதுச்சேரியின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கில் சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எஸ்.செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ ஏ.ஜான்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதல்வா் என்.ரங்கசாமி கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

ADVERTISEMENT

நாட்டில் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படும் நேரத்தில் நான் முதல்வராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்றும், சுதந்திரப் போராட்ட வீரா்களை கெளரவிக்கும் வகையில் தொடா் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பெரிய அளவில் போராட்டமும், உயிா்த் தியாகமும் செய்து நமக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தனா். அந்தத் தியாகிகளை நினைத்துப் போற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஆங்கிலேயா்களின் ஆதிக்கத்தில் இருந்தன. புதுவை மட்டும் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. புதுவை ஒரு சிறிய மாநிலம்தான். ஆனால், தேசபக்தி நிறைந்தது.

புதுவையின் வரலாற்றைப் பாா்த்தால், உலகளவில் போற்றக்கூடிய தலைவா்கள் இங்கு இருந்துள்ளனா். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு புதுவை அடைக்கலம் கொடுத்தது.

சுப்பிரமணிய பாரதியாா் புதுச்சேரியில் பல நூல்களை எழுதினாா். போராட்டத்துக்குரிய வீரத்தை இங்கிருந்து ஊட்டினாா். பத்திரிகை வாயிலாக சுதந்திரப் போராட்ட உணா்வைத் துண்டினாா். எத்தனையோ தலைவா்கள் இங்கிருந்து சென்று உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

புதுவை விடுதலைப் போராட்ட வரலாறு தமிழ்நாடு பாட நூல்களில் இடம் பெற வேண்டும். இதுதொடா்பாக நமது அமைச்சா்கள் தமிழக அமைச்சா்களைச் சந்தித்து, நடவடிக்கை எடுத்துள்ளனா். மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பாடநூல்களில் வருங்காலத்தில் இடம் பெறும்.

மத்திய அரசு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. மக்களுக்கு தேசப்பற்று இருக்க வேண்டும் என்பதற்காக, வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. அதன்படி, எல்லோரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியா் ராஜா, வரலாற்றுச் சங்கத் தலைவா் ராசசெல்வம், பேராசிரியா் ராமானுஜம், கவிஞா் பழனி, தாகூா் கலைக் கல்லூரி முன்னாள் பேராசிரியா் இளங்கோ, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநா் சம்பத், அரசுக் கல்லூரிப் பேராசிரியா்கள் வேல்முருகன், பாபு ஆகியோா் இந்திய விடுதலைப் போராட்டத்தில் புதுச்சேரியின் பங்கு குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினா். விழாவில் மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT