புதுச்சேரி

புதுவை பட்ஜெட்டுக்கான நிதியைக் குறைத்துஏமாற்றியுள்ளது மத்திய அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு

14th Aug 2022 05:32 AM

ADVERTISEMENT

 

புதுவை பட்ஜெட்டுக்கான நிதியைக் குறைத்தும், வெளிசந்தையில் கடன் வாங்க அனுமதியளித்தும் மத்திய அரசு ஏமாற்றியுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியுள்ளதாவது: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடப்பதற்காக, காந்தி சிலை பாதியளவு மறைக்கப்பட்டுள்ளது. நேரு சிலை அருகேவும் மறைக்கப்பட்டுள்ளது வேதனை.

இப்போது புதுவையில் ரூ.10,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தொகை வருவதற்கு காரணம், மத்திய அரசு ஏற்கெனவே மாநிலங்களுக்கு வெளிச் சந்தையிலிருந்து கடன் வாங்குகிற அதிகார வரம்பை ரூ.1,000 கோடியாக உயா்த்தியது. இப்போது புதுவைக்கு மேலும் ரூ.900 கோடி அதிகரித்து, ரூ.1,900 கோடியாக உயா்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இதனால், மத்திய அரசு ரூ.1,721 கோடிக்கு மேல் ஒரு பைசா கூட புதுவைக்கு மானியம் அளிக்கவில்லை. கடந்தாண்டைவிட நிகழாண்டு ரூ.150 கோடி மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான எந்த விளக்கமும் மத்திய அரசு அளிக்கவில்லை. ஆனால், வெளிசந்தையில் கடன் பெறுவதற்கான நிதியை அதிகரித்துவிட்டு ரூ.10,700 கோடியாக பட்ஜெட்டையை அறிவித்துள்ளனா். இதனால், கடன் சுமையை அதிகப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமையும். நிதிச் சுமை ஏற்படும். மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காத நிலையை உருவாக்கி இருக்கிறது.

புதுவையில் வரி மூலம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. நமக்கு மத்திய அரசிடமிருந்து முறையாக ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்க வேண்டும். ஆனால், ரூ.1,721 கோடிதான் கிடைக்கிறது.

மத்திய அரசு நம்மிடமிருந்து வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு 24 சதவீதம் தொகையை மட்டுமே கொடுக்கிறது. பிற மாநிலங்களுக்கு வழங்குவதுபோல 41 சதவீதம் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இதனால், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

புதுவைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், புறவழிச் சாலை அமைக்கவும், புதிய மேம்பாலம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. காவல்துறை விழிப்போடு இருந்து கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆனால், காவல் துறையினா் மாமூல் வாங்கிக் கொண்டு, கஞ்சா விற்போருடன் கூட்டணி சோ்ந்துள்ளனா். கஞ்சா விற்பவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT