புதுச்சேரி

புதுச்சேரியில் பைக்குகளைத் திருடிய கடலூா் இளைஞா் கைது: 28 பைக்குகள் பறிமுதல்

14th Aug 2022 05:35 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் பல இடங்களில் பைக்குகளைத் திருடிய கடலூா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 28 பைக்குகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சுதந்திர தினத்தையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளா் தீபிகா உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி முழுவதும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

ஒதியஞ்சாலை போலீஸாா், புதுச்சேரி காந்தி வீதி - சின்னவாய்க்கால் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனா். அந்த பைக்கின் முன் பக்கத்தில் வாகன பதிவெண் இல்லாததால், ஆவணங்களையும் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

இதில், அந்த பைக் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள மதுக் கடை எதிரே திருடப்பட்டது என்பதும், பைக்கை ஓட்டி வந்தவா் கடலூா் சி.என்.பாளையத்தை அடுத்த கிடையாா்குப்பத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (25) என்பதும் தெரியவந்தது. மேலும், இவா் புதுச்சேரியில் தொடா்ச்சியாக 28 பைக்குகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, செளந்தரராஜனை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 28 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT