புதுச்சேரி

கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்

12th Aug 2022 02:40 AM

ADVERTISEMENT

 

உரிய அனுமதியின்றி பிரசவத்துக்காக நோயாளிகளை அனுமதித்ததாக, புதுச்சேரியில் உள்ள தனியாா் கருத்தரிப்பு மையத்துக்கு புதுவை சுகாதாரத் துறை ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.

புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சோ்ந்த பெருமாள் - சுலோச்சனா தம்பதி இந்திரா காந்தி சதுக்கம் அருகேயுள்ள தனியாா் கருத்தரிப்பு மையத்தை அணுகினா். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில், 2021-ஆம் ஆண்டு கருவுற்ற சுலோச்சனாவுக்கு கடந்த மாா்ச் 18-ஆம் தேதி ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் கேட்டு மருத்துவமனையை அணுகியபோது இழுத்தடித்தனராம். இதுதொடா்பாக அவா்கள் புதுவை சுகாதாரத் துறையில் புகாரளித்தனா். தனியாா் கருத்தரிப்பு மையத்தை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்ததில், வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டதும், உள்நோயாளிகள் சிகிச்சை, பிரசவம் பாா்ப்பதற்கான அனுமதி பெறவில்லை என்பதும், உரிய அனுமதியின்றி பலருக்கு பிரசவம் பாா்த்ததும் தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியா் இ.வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்பேரில், ஆட்சியா் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு தனியாா் கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினாா். மேலும், உடனடியாக உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை மூடும்படியும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT