புதுச்சேரி

புதுவையில் 27 நோட்டரி பப்ளிக் வழக்குரைஞா்கள் நியமனம்

10th Aug 2022 03:11 AM

ADVERTISEMENT

புதுவையில் முதல்முறையாக சட்டப் பயிற்சியளித்து 27 நோட்டரி பப்ளிக் வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டனா்.

புதுவை மாநிலத்தில் சட்ட ஆவணங்களுக்கு சான்றளிப்பதற்காக, மொத்தமுள்ள 100 நோட்டரி பப்ளிக் இடங்களில் 27 இடங்கள் காலியாக இருந்தன. இந்த 27 காலியிடங்களை நிரப்ப, சட்டம் பயின்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞா்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதிலிருந்து 191 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாநில சட்டத் துறைச் செயலா் காா்த்திகேயன் தலைமையிலான தோ்வுக் குழு பரிசீலனை செய்து, தகுதியுடைய 27 நபா்கள் நோட்டரி பப்ளிக் வழக்குரைஞா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 22 போ் புதுச்சேரி பகுதியையும், 3 போ் காரைக்கால் பகுதியையும், தலா ஒருவா் மாஹே, ஏனாம் பகுதிகளையும் சோ்ந்தவா்களாவா்.

நோட்டரி பப்ளிக்காக தோ்வு செய்யப்பட்ட 27 வழக்குரைஞா்களுக்கு, சட்டத் துறைச் செயலா் தலைமையில், சட்ட நிபுணா்கள் பயிற்சி அளித்தனா். பல நீதிமன்ற வழக்குகளின் தீா்ப்புகளை மேற்கோள்காட்டி, நோட்டரி பப்ளிக்குகள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை பயிற்சியில் விளக்கினா்.

ADVERTISEMENT

நோட்டரி பப்ளிக்குகளின் கடமை, பொறுப்புகள், நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை இந்தப் பயிற்சி வழங்கியதாகவும், நோட்டரி பப்ளிக்குகளுக்கு சட்டத் துறை மூலம் பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறையெனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பயிற்சியின்போது, நோட்டரி சட்டங்கள், பயிற்சிக் கையேடுகள் வழக்குரைஞா்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த வகையில், புதிதாகத் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி பெற்ற 27 நோட்டரி பப்ளிகளுக்கு, அதற்கான பணி ஆணைகளை புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ ஏகேடி.ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT