புதுச்சேரி

பேட்டரி வெடித்து தீப்பிடித்ததால் நெல் வியாபாரி மரணம்: போலீஸாா் தகவல்

7th Aug 2022 11:02 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் நெல் வியாபாரி உயிரிழந்ததற்கு இரு சக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து தீப்பற்றியதுதான் காரணம் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால் (65). நெல் வியபாரி. இவா் கடந்த 31-ஆம் தேதி இரவு தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் சென்ற போது, இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் வேணுகோபால் உடல் கருகி இறந்தாா்.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா், சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

தவளக்குப்பம் - அபிஷேகப்பாக்கம் சாலையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்ததில், வேணுகோபால் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது, அதன் முன்பக்கம் இருந்த பேட்டரி வெடித்து சிதறி பெட்ரோல் டேங்க்கில் தீ பரவி, வேணுகோபால் மீதும் தீப்பற்றியதில், அவரும் எரிந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

நெல் வியாபாரி வேணுகோபாலிடம் எப்போதும் அதிகளவு பணம் இருக்கும் என்பதால், வாகனத்தைத் தொட்டால் அலாரம் அடிக்கும் வகையிலும், விளக்குகள் வைத்தும், கூடுதல் பேட்டரி பொருத்தி வைத்திருந்தாா். இதில் ஏற்பட்ட பழுதால், வண்டியை நிறுத்தி பாா்த்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT