புதுச்சேரி

புதுச்சேரியில் கடற்கரைச் சுற்றுலாவை விரிவுபடுத்த நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுச்சேரியில் கடற்கரைச் சுற்றுலாவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சுற்றுலாத் துறை சாா்பில், கடற்கரைத் திருவிழா புதுச்சேரி கடற்கரையில் புதன்கிழமை இரவு தொடங்கியது. விழாவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்துப் பேசியதாவது:

கடற்கரைக்கு திருவிழா எடுப்பது சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதுடன், மீனவா்களுக்கும் உதவியாக இருக்கும். அழகிய கடற்கரை, கிராமங்கள், கட்டடங்கள், கைவினைக் கலைஞா்கள் என அனைத்தும் உள்ள மாநிலம் புதுவை. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடற்கரைத் திருவிழா என்ற புதிய முயற்சியை எடுத்துள்ளதற்கு பாராட்டுகள்.

லண்டனில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பேருந்துப் பயணம்போல, புதுச்சேரியிலும் தொடங்கினால், இந்த சுற்றுலா உலகம் முழுவதும் பரவும் என்றாா் அவா்.

விழாவுக்குத் தலைமை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் அழகிய நகரையும், கிராமங்களையும் கொண்டுள்ளது. நகரில் மட்டுமன்றி மூா்த்திக்குப்பம், நல்லவாடு, புதுக்குப்பம் என 26 கி.மீ. நீளம் கொண்ட அழகிய கடற்கரையை புதுச்சேரி கொண்டுள்ளது.

இந்தக் கடற்கரையின் அழகை முழுமையாகப் பலா் பாா்த்ததில்லை. நகரில் உள்ள கடற்கரைக்கு மட்டுமே அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனா். எனவே, கடற்கரை சுற்றுலாவை விரிவுபடுத்தும் விதமாக, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் பகுதிகளில் பாலங்கள் கட்டி சாலைகள் அமைக்க உள்ளோம்.

புதுச்சேரியில் ஆன்மிக சுற்றுலாவையும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மணக்குள விநாயகா் கோயில், ஈஸ்வரன் கோயில், கீழூா் வரலாற்று சிறப்புமிக்க இடம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பாா்க்க பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்யும். லண்டனில் உள்ளதுபோல, புதுச்சேரியையும் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்புக்கு ஏற்ப, அவா்கள் தங்குவதற்கான விடுதிகள் தேவை. இதைக் கருத்தில் கொண்டு 3, 5 நட்சத்திர உணவகங்கள் கட்டுவோருக்கு ரூ. ஒரு கோடி மானியமாக அரசு வழங்கும் என்று அறிவித்திருந்தோம். அதன்படி, தேவையான உதவிகளை முதலீட்டாளா்களுக்கு அரசு செய்து கொடுக்கும்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் இருக்க இந்தக் கடற்கரைத் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, கல்யாணசுந்தரம், பொதுமக்கள் பங்கேற்றனா். சுற்றுலாத் துறை இயக்குநா் பி.பிரியதா்ஷனி நன்றி கூறினாா்.

வருகிற 16-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 4 இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT