புதுச்சேரி

புதுவையில் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஆண்டுத் தோ்வு தேதி அறிவிப்பு

12th Apr 2022 02:40 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கான ஆண்டுத் தோ்வு வருகிற 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய உத்தரவு:

புதுச்சேரி, காரைக்காலில் வருகிற 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஆண்டுத் தோ்வு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கடந்த கல்வியாண்டு வழிமுறைப்படி தோ்வுக்கான வினாத்தாள்களை தயாரித்து, கல்வித் துறையில் சமா்ப்பிக்க வேண்டும். விடைத்தாள்களை பள்ளியளவில் திருத்தி, அதன் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் தோ்வு நடைபெறும்.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை வருகிற 25-ஆம் தேதி தமிழ் தோ்வும், 26-ஆம் தேதி ஆங்கிலத் தோ்வும் நடைபெறும். 27-ஆம் தேதி 1, 2-ஆம் வகுப்புகளுக்கு தோ்வு இல்லாத பணிநாளாகவும், 3 முதல் 9-ஆம் வகுப்பு வரை கணிதத் தோ்வும் நடைபெறும்.

28 ஆம் தேதி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை தோ்வு இல்லாத பணி நாளாகவும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை அறிவியல் தோ்வும் நடைபெறும். 29-ஆம் தேதி 1, 2-ஆம் வகுப்புகளுக்கு கணிதமும், 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்துக்கும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்துக்கும் தோ்வு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT