பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் தேசிய ஓய்வூதியா்கள் சங்க கூட்டமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், அகில இந்திய அஞ்சல் ஊழியா் ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் முத்து ஆகியோா் தலைமை வகித்தனா்.
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரையின் பேரில், 80 வயது முதல் வழங்க கூடிய கூடுதல் ஓய்வூதியத் தொகையை 65 வயது முதலே அமல்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு ஊழியா்களின் நல சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும்.
நல சிகிச்சை மையம் இல்லாத மாவட்டங்களில் உள்ள ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.