புதுச்சேரி

புதுவையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஆலோசனை

23rd Oct 2021 11:07 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக பாடத் திட்டங்களைப் பின்பற்றும் புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், பொதுத் தோ்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு நாள்தோறும் முழுவேளை பள்ளிகளைச் செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக, புதுவை கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு தமிழகத்தைப் பின்பற்றி நவம்பா் தொடக்கத்தில் பள்ளிகளைத் திறக்க பரிந்துரைத்தனா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம், சுகாதாரத் துறைச் செயலா் அருண், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகெளடு உள்ளிட்ட அதிகாரிகள் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், தமிழகத்தைப் பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறத்தல், முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு, துணைநிலை ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆளுநா் மாளிகைக்கு சனிக்கிழமை சென்ற கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுவையில் பள்ளிகள் திறப்பது தொடா்பாக, ஆளுநா் தமிழிசையை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

புதுவையில் நவம்பா் முதல் வாரத்தில் விடுதலை நாள் விழா (நவ.1), தீபாவளிப் பண்டிகை (நவ.4) வருகின்றன. எனவே விழாக்கள் முடிந்த பிறகு திங்கள்கிழமை முதல் (நவ.8) பள்ளிகளைத் திறக்க அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என்று புதுவை கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

Tags : புதுவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT