புதுச்சேரி

புதுவையில் மூடிக் கிடக்கும் நியாய விலைக் கடைகள்!

23rd Oct 2021 12:25 AM

ADVERTISEMENT

புதுவையில் நீண்ட காலமாக மூடிக் கிடக்கும் நியாய விலைக் கடைகளைத் திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

புதுவை மாநிலத்தில் 377 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் கூட்டுறவுத் துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ கீழ் 35, தனியாா் பராமரிப்பில் 25 உள்ளன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசியைக் கொள்முதல் செய்து வழங்குவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி, அப்போதைய துணைநிலை ஆளுநா் அரிசி வழங்குவதற்குப் பதிலாக, அதற்குரிய தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமாக மாற்றினாா். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நியாய விலைக் கடைகள் மூடப்பட்டன. இதில் பணியாற்றிய 700 பேருக்கு வேலையின்றி, கடந்த 42 மாதங்களாக ஊதியமின்றி உள்ளனா்.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு, நியாய விலைக் கடைகளைத் திறந்து பொருள்கள் வழங்கப்படுமென உறுதியளித்தது. ஆனால், இதுவரை நியாய விலைக் கடைகள் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT

நியாய விலைக் கடைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சா் உறுதி

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறைத் திட்டங்கள் குறித்து மத்திய உணவு-பொது விநியோகத் துறை அதிகாரி ராஜன் தலைமையிலான குழுவினா், வெள்ளிக்கிழமை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனா். மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் கூறியதாவது: புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதற்குரிய நிதி ஆதாரத்தை மத்திய அரசிடம் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளோம். அவ்வாறு வழங்க முடியாதபட்சத்தில், கடனுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

இதுகுறித்து மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், முதல்வருடன் ஆலோசித்து விரைவில் நியாய விலைக் கடைகளைத் திறந்து அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்படும் என்றாா் அவா்.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT