புதுச்சேரி

புதுவையில் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: ஆளுநா் தமிழிசை அறிவுறுத்தல்

21st Oct 2021 09:18 AM

ADVERTISEMENT

புதுவையில் பொதுமக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா்.

இதில், சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண், புதுச்சேரி வளா்ச்சி ஆணையா் பிரசாந்த் கோயல், வருவாய்த் துறைச் செயலா் அசோக்குமாா், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், செய்தித் துறைச் செயலா் உதயகுமாா், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, ஜிப்மா் இயக்குநா் ராஜேஷ் அகா்வால், மாநில கரோனா மேலாண்மை பொறுப்பு அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாய்ரா பானு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆளுநா் தமிழிசை பேசுகையில், புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையும் நோக்கில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT