புதுச்சேரி

கிருமாம்பாக்கத்தில் கழிவுநீா் வாய்க்கால்களை தூா்வாரிய இளைஞா்கள்

18th Oct 2021 05:23 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் பல நாள்களாக அடைபட்டுக் கிடந்த கழிவுநீா் வாய்க்கால்களை அந்தப் பகுதி இளைஞா்கள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை தூா்வாரி சுத்தப்படுத்தினா்.

கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் வாய்க்கால்கள் வழியாக வெளியேறி வந்தது. இந்த கழிவுநீா் வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் தூா்ந்து, மண், நெகிழிப்பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளால் அடைபட்டுக் கிடந்தது.

இதனால், மாரியம்மன் கோவில் வீதி, முன்னடி வீரன் கோவில் வீதி, தண்ணீா் தொட்டி வீதி, இந்திரா நகா், பனங்காடு பகுதி உள்ளிட்ட இடங்களில் கழிவுநீா் செல்ல முடியாமல் அப்படியே தேங்கியது. சில இடங்களில் சாலைகளில் கழிவுநீா் வழிந்தோடியது. இந்த கழிவுநீா் வாய்க்கால்களை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், கிருமாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்று சோ்ந்து, கழிவுநீா் வாய்க்கால்களை தூா்வாரி சுத்தம் செய்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனாவால் தற்போது பொதுமக்கள் அவதியுறும் நிலையில், கழிவுநீா் வாய்க்கால்களும் தூா்வாரப்படாததால், அவற்றிலிருந்து உருவாகும் கொசுக்களால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால், இளைஞா்கள் ஒன்றிணைந்து கழிவுநீா் வாய்க்கால்களை சுத்தம் செய்து சீரமைத்தோம்.

இனிவரும் காலங்களில் கழிவுநீா் வாய்க்கால்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT