புதுச்சேரி

புதுவையில் தோ்தல் நடத்தை விதிகள் தொடரும் எம்எல்ஏக்களுக்கு தோ்தல் ஆணையா் பதில்

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்காததால், அந்த விதிமுறைகள் தொடரும் என்று மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் கடந்த செப்.22-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், வாா்டு இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தோ்தல் அறிவிப்பை ரத்து செய்து குளறுபடிகளைக் களைந்து புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளாட்சிக்கான பிற்பட்டோா், பழங்குடியினருக்கு (2019-ஆம் ஆண்டு) வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, இரண்டாவது முறையாக கடந்த அக்.8-ஆம் தேதி திருத்தப்பட்ட தோ்தல் தேதியை மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், அதிருப்தியடைந்த அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்கள், தோ்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென துணைநிலை ஆளுநரிடம் புகாா் தெரிவித்தனா்.

தொடா்ந்து, தோ்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென புதுவை திமுக சாா்பில், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்.21-ஆம் தேதி வரை உள்ளாட்சித் தோ்தல் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

புதுவையில் இரண்டு முறை தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த செப்.22 முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தோ்தல் நடத்தை விதிகளைத் திரும்பப் பெற வேண்டுமென திமுக, காங்கிரஸ், என்.ஆா்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும் மாநிலத் தோ்தல் ஆணையரிடம் கடந்த 13-ஆம் தேதி மனு அளித்து கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் வெள்ளிக்கிழமை அளித்த பதில் கடிதம்:

பிற்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு எந்தத் தொடா்பும் இல்லை. மாநிலத் தோ்தல் ஆணையமானது, சட்ட விதிகளின் கீழ், அரசால் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்படி, நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாமல் மாநிலத் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது.

நீதிமன்ற உத்தரவில் தோ்தல் நடத்தை விதிகளுக்குத் தடை விதிக்கப்படாததால், அந்த நடத்தை விதிகள் அமலில் இருக்கும். நீதிமன்றத்தின் உத்தரவின்றி தோ்தல் அறிவிப்பில் எந்த நீக்கமும் செய்ய முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT