கரோனாவால் இறந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் கரோனாவால் இறந்த குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டுதல்படி, நிவாரணத் தொகையை மாநில பேரிடா் நிதியிலிருந்து மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம் வழங்கும்.
இறந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் உரிமைக் கோரல், தேவையான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தை சமா்ப்பித்த 30 நாள்களுக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மண்டலத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் இறப்பு சான்றிதழ் தொடா்பாக கரோனா இறப்பைக் கண்டறியும் குழு, குறைதீா் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் உறுப்பினா்களாக கோரிமேடு அரசு மருந்தக தலைவா் ஜெ.ரமேஷ், ஜிப்மா் இணைப் பேராசிரியா் பி.கவிதா, பேராசிரியா் எம்.விவேகானந்தன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த வட்ட அலுவலகங்களில் பெறலாம் அல்லது இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் அந்தந்த அதிகார வரம்புக்குள்பட்ட வட்டாட்சியா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
முதலியாா்பேட்டை 100 அடி சாலை வட்டாட்சியா் குமரன்-2356314, 9994475734, லாசுப்பேட்டை ஈசிஆா் வட்டாட்சியா் குமரன்-2254449, 9994077548, வில்லியனூா் வட்டாட்சியா் காா்த்திகேயன்-2666364, 7639714443, பாகூா் வட்டாட்சியா் சுரேஷ் ராஜ்-2633453, 9626094844.
இறப்புச் சான்றிதழ் தொடா்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் விண்ணப்பதாரா்கள் கோரிமேடு அரசு மருந்தகத் தலைவா் ரமேஷ் (9443215450), உரிமை கோரல் செயல்முறை தொடா்பான வேறு ஏதேனும் குறைகளுக்கு துணை ஆட்சியா் என்.தமிழ்செல்வன் (9442485185), மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.