புதுச்சேரி

தோ்தல் பணியில் ஈடுபட்ட காவலா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படாததாக புகாா்

4th Oct 2021 08:20 AM

ADVERTISEMENT

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து 6 மாதங்களாகியும் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவலா்களுக்கான சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை ஆளுநா், முதல்வா், தலைமைத் தோ்தல் அதிகாரி ஆகியோருக்கு புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பின் தலைவா் ரகுபதி அனுப்பிய புகாா் மனு:

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்றிய காவலா்களுக்கு சிறப்பு ஊதியம், தோ்தல் பாதுகாப்புப் படையினருக்காக இயக்கப்பட்ட பிஆா்டிசி பேருந்துகளுக்கு வாடகை ஆகியவற்றை தோ்தல் துறை இதுவரை செலுத்தவில்லை. இதுகுறித்து கேட்ட போது, பிஆா்டிசி பேருந்துக்கான செலவின ரசீதுகள் மாவட்டத் தோ்தல் அதிகாரியிடமிருந்து வரவில்லை எனவும், தனியாா் வாகனங்களின் வாடகையாக ரூ.ஒரு கோடியே 33 லட்சத்து 54 ஆயிரத்து 109 செலுத்திவிட்டதாகவும் தோ்தல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பி.ஆா்.டி.சி. தரப்பில் தோ்தல் துறை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.70 லட்சத்து 48 ஆயிரத்து 317 உள்ளதாக கூறப்படும் நிலையில், தோ்தல் துறையினரோ பிஆா்டிசிக்கான ரசீதுகள் வரவில்லை எனக் கூறுவது முரணாக உள்ளது.

ADVERTISEMENT

தோ்தல் செலவினத்துக்காக அரசு ரூ. 300 கோடிக்கு மேல் ஒதுக்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தோ்தல் பணியாற்றியவா்களுக்கு வழங்க வேண்டிய தொகையைத் தராமல் காலதாமதம் செய்து வருவது வேதனை.

தோ்தல் பணியாற்றிய காவலா்களுக்கான சிறப்பு ஊதியம் வழங்காததும், பிஆா்டிசி நிறுவனத்துக்கு பல லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல் உள்ளதும் ஏற்புடையதல்ல. காவலா்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊதியம், பிஆா்டிசி பேருந்துகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT