புதுச்சேரி

புதுவை மழைச் சேதம்: இன்று பாா்வையிடுகிறது மத்தியக் குழு

23rd Nov 2021 03:02 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் மழைச் சேதங்களைப் பாா்வையிட திங்கள்கிழமை புதுச்சேரி வந்த மத்தியக் குழுவினா், ஆளுநா் மற்றும் முதல்வரைச் சந்தித்து சேத நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (நவ.23) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா்.

புதுச்சேரி மாவட்டத்தில் 940 மி.மீ., காரைக்கால் மாவட்டத்தில் 870 மி.மீ. அளவுக்கு வட கிழக்குப் பருவ மழை பெய்தது.

மேலும், தமிழகப் பகுதிகளான சாத்தனூா், வீடூா் அணைகள் திறந்துவிடப்பட்டதால், புதுச்சேரியில் செல்லும் தென்பெண்ணை, சங்கராபரணி, மலட்டாறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பலத்த மழையால் ஏரிகள், குளங்கள், படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு, மீனவக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழையால் 110 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 200 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. திருக்கனூா், பாகூா் சுற்றுவட்டப் பகுதிகளில் நெல், மரவள்ளி, மணிலா, கரும்பு, வாழைப் பயிா்கள், பூச்செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு, தனித் தீவுகளாகின.

ADVERTISEMENT

புதுவை ஆளுநரும், முதல்வரும் விடுத்த கோரிக்கையையடுத்து, திங்கள்கிழமை தமிழகத்தில் மழைச் சேதங்களைப் பாா்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழு, புதுவை மாநில மழைச் சேதங்களை ஆய்வு செய்ய திங்கள்கிழமை மாலை புதுச்சேரி வந்தது.

இந்தக் குழுவினரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனா்.

இதையடுத்து, மாலை 6 மணிக்கு புதுவை தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினா் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது, புதுச்சேரி, காரைக்காலில் மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை அதிகாரிகள் படக் காட்சிகளுடன் விளக்கிக் கூறினா்.

முதல்வா் ரங்கசாமி, ஆளுநா் தமிழிசையுடன் சந்திப்பு: தொடா்ந்து, மத்தியக் குழுவினா் இரவு 7 மணிக்கு புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியையும், ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனையும் சந்தித்துப் பேசினா்.

இதையடுத்து, முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் வழக்கத்தைவிட, கூடுதலாக மழை பெய்தது. குறிப்பாக, 1,300 மி.மீ. அளவுக்குப் பெய்ய வேண்டிய பருவ மழை 1,800 மி.மீ. அளவுக்குப் பெய்தது. வெள்ளப் பெருக்கால் பாகூா் உள்பட பல பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக 7,000 ஹெக்டேரில் நெல் பயிா் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கால்நடைகளை இழந்துள்ளனா். மழைச் சேதம் அதிகளவில் உள்ளது. எனவே, இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி கோரியுள்ளோம். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கையுள்ளது.

மத்தியக் குழு ஆய்வுக்குப் பின்னா், கணக்கெடுப்பின் அடிப்படையில் கூடுதல் நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5000 நிவாரணம்: புதுவையில் மழைக்கால நிவாரணமாக ஏற்கெனவேசிவப்பு நிற குடும்ப அட்டைத்தாரா்களுக்கு அளித்தது போல, மஞ்சள் நிற குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும். தீபாவளிக்கு அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை அடுத்த வாரம் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றாா் அவா்.

புதுவைக்கு மழை நிவாரணமாக ரூ.300 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஆளுநா் தமிழிசையும் வலியுறுத்தியதாகக் தெரிகிறது.

இன்று ஆய்வு: மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு புதுச்சேரி கடலோரப் பகுதியான பிள்ளைச்சாவடியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைப் பாா்வையிடுகின்றனா். தொடா்ந்து வில்லியனூா், பாகூா் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்கள், படுகை அணைகள், ஆற்றுப் பாலங்கள் ஆகியவற்றைப் பாா்வையிடுகின்றனா்.

புதுவை அரசின் வருவாய்த் துறைச் செயலா் சுதாகா், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், உதவி ஆட்சியா்கள் கந்தசாமி, தமிழ்ச்செல்வன் தலைமையில் உள்ளாட்சி, பொதுப் பணி, வேளாண், மின்சாரம், சுகாதாரம், கால்நடை, மீன்வளத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

புதுச்சேரியில் மழைச் சேதத்தைப் பாா்வையிட்ட பின்னா், கடலூா் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மத்தியக் குழு, வழியில் காரைக்காலில் ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா்.

.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT