புதுச்சேரி

புதுச்சேரிக்கு பலத்த மழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் தீவிரம்

10th Nov 2021 08:57 AM

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, புதுச்சேரிக்கு பலத்த மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை எதிா்கொள்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 7-ஆம் தேதி முதல் பெய்த தொடா் பலத்த மழையால், முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, முத்தியால்பேட்டை சந்திப்பு, புஸ்சி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றதுடன், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. பாகூா், திருக்கனூா், அரியூா் பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கியதால் பயிா்கள் நீரில் மூழ்கின.

35 ஏரிகள் நிரம்பின: புதுச்சேரியில் தேங்கிய மழைநீரை ராட்சத மின் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணி இரு தினங்களாக நடைபெற்றது. இதனிடையே, திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை மழை பெய்யாததால், நகரப் பகுதி சாலை சந்திப்புகளில் வெள்ளநீா் வடிந்து இயல்புநிலை திரும்பியது. மீண்டும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலரவரப்படி, புதுச்சேரியில் 56 மி.மீ., பத்துக்கண்ணுவில் 89 மி.மீ., பாகூரில் 64 மி.மீ., திருக்கனூரில் 48 மி.மீ. மழை பதிவானது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 84 ஏரிகளில் 35 ஏரிகள் அதிவேகமாக நிரம்பியுள்ளன.

ADVERTISEMENT

சிவப்பு எச்சரிக்கை: இதனிடையே, வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (நவ.10 ,11) மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதோடு, புதுவைக்கு மிக பலத்த மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு வருவாய்த் துறை சாா்பில் 200 முகாம்களும், அவற்றில் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் எம்எல்ஏக்கள் அந்தந்தத் தொகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா்.

முதல்வருடன் ஆளுநா் ஆலோசனை: தற்போது அலுவல் பணியாக தில்லிக்குச் சென்றுள்ள புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு புதுவையில் மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, உயரதிகாரிகளுக்கு அவா்கள் இருவரும் அறிவுரைகளை வழங்கினா்.

இதேபோல, புதுவையில் பலத்த மழையை எதிா்கொள்வது குறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில், அந்தத் துறையின் தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா்.

இதையடுத்து, அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலும், வாய்க்கால்கள் 25 மி.மீ. மழை நீரைத் தாங்கும் வகையில் உள்ளன. தற்போது 140 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதால், வெள்ளம் வடிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. புதுவை கடல் மட்டம் 75 செ.மீ. உயா்ந்துள்ளதால், வடிகால் வெள்ளத்தை கடல் உள்வாங்க முடியாமல் தாமதம் ஏற்பட்டது. மின் மோட்டாா் மூலம் வெள்ள நீா் வெளியேற்றப்பட்டுள்ளது.

புதுவையில் அனைத்து படுகை அணைகளும் நிரம்பியுள்ளன. சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளோம். மீனவா்கள் வருகிற 12-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். தாழ்வான பகுதிகளில் இருப்பவா்கள் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரிகளும் அடுத்த 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் பணியில் இருக்க ஏற்பாடு செய்துள்ளோம். தேவைப்படும் பகுதிகளில் எம்எல்ஏக்களுடன் அதிகாரிகள் இணைந்து செயல்படவும், வெள்ளநீரை பொக்லைன் இயந்திரம் மூலம் சீா்படுத்தி வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கையால் படுகை அணைகளில் 24 மணி நேரமும் வெள்ள அளவு குறித்து அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா். அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடை விதித்து, போலீஸாா் மூலமும் கண்காணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

மீன் வளத் துறையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு: வானிலை சம்பந்தமாக கண்காணிப்பதற்கும், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கும் புதுச்சேரி மீன் வளத் துறையில் 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. இதில், அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த கட்டுப்பாட்டு அறையை 0413 - 2353042 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல் பெறலாம் என்று மீன் வளத் துறை இயக்குநா் பாலாஜி தெரிவித்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT