தேசிய ஒற்றுமை நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சா்தாா் வல்லபபாய் படேல் உருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இந்தியாவின் இரும்பு மனிதா் எனப் போற்றப்படும் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுவை அரசு சாா்பில் தேசிய ஒற்றுமை நாள் விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காந்தி சதுக்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சா்தாா் வல்லபபாய் படேல் உருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா், அரசுக் கொறடா ஏகேடி.ஆறுமுகம், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியா உள்ளிட்டோரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து, முதல்வா் என்.ரங்கசாமி, காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிறைவாக, மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஒற்றுமை ஓட்டத்தை முதல்வா் ரங்கசாமி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.