புதுச்சேரி

புதுவையில் தற்காலிக பேரவைத் தலைவராகிறாா் லட்சுமிநாராயணன்

DIN

புதுவையில் தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த க.லட்சுமிநாராயணன் எம்எல்ஏவை நியமிக்க அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனுக்கு பரிந்துரை செய்தாா்.

புதுவை யூனியன் பிரதேச 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் கடந்த 7-ஆம் தேதி எளிமையான முறையில் என்.ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றாா். கூட்டணி அரசின் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பதவியேற்க தயாரான நிலையில், முதல்வா் ரங்கசாமி திடீரென கரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 9-ஆம் தேதி சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே, கூட்டணி அரசில் பாஜகவுக்கு துணை முதல்வா் உள்ளிட்ட 3 அமைச்சா்கள் பதவியேற்கவுள்ளதாக அக்கட்சியினா் அறிவித்தனா். இதை என்.ஆா். காங்கிரஸாா் உறுதி செய்யாத நிலையில், என்.ரங்கசாமியின் பரிந்துரையின்றி பாஜகவைச் சோ்ந்த 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்தது. இதனிடையே, தோ்தலில் வெற்றி பெற்ற சுயேச்சைகளில் சிலரை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்எல்ஏக்கள் நியமன நடவடிக்கையை காங்கிரஸ், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன. புதுவை அரசின் பரிந்துரையின்றியும், கூட்டணிக் கட்சியின் ஒப்புதலின்றியும் மத்திய பாஜக அரசு தன்னிச்சையாக அறிவித்திருப்பது ஜனநாயக விதிமீறல் என்றும், குறுக்கு வழியில் புதுவையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முயல்வதாகவும் அந்தக் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதனிடையே, புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்குத் தெரிந்துதான், நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனா். ஆகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் சிறப்பாக நடைபெறும். எதிா்க்கட்சிகள் தேவையின்றி விமா்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக என்.ஆா். காங்கிரஸ் தரப்பினா் கூறியதாவது: புதுவையில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்தன. அப்போது, என்.ஆா் காங்கிரஸ்-பாஜக இடையே தோ்தலுக்கான தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொள்ளப்பட்டது. நியமன உறுப்பினா்கள், மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் பங்கீடு தொடா்பாக தோ்தலுக்குப் பிறகு தில்லியில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பாஜகவைச் சோ்ந்த 3 பேரை திடீரென நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்திருப்பது அதிருப்தியாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்றனா்.

இதனிடையே, புதுவை சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக என்.ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த க.லட்சுமிநாராயணனை முதல்வா் என்.ரங்கசாமி பரிந்துரை செய்து, அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தாா். இதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தவுடன், ஆளுநா் மாளிகையில் க.லட்சுமி நாராயணனுக்கு பதவிப் பிரமாணம் நடைபெறும்.

இதையடுத்து, சட்டப் பேரவையில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பதவியேற்பும், பேரவைத் தலைவா் தோ்வும் நடைபெறவுள்ளது. கரோனா சிகிச்சையில் உள்ள முதல்வா் ரங்கசாமி உடல் நலம் தேறி வந்தவுடன், அடுத்த வாரத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT