புதுச்சேரி

புதுவையில் பாஜகவினருக்கு நியமன எம்எல்ஏக்கள் பதவி: ஜனநாயக விரோத நடவடிக்கை; காங்கிரஸ் புகாா்

DIN

புதுவை சட்டப் பேரவைக்கு அவசரமாக, தன்னிச்சையாக பாஜகவினா் மூவரை நியமன உறுப்பினா்களாக அந்தக் கட்சி நியமித்திருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் விமா்சித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வருகிறாா்.

மாநிலத்தில் தற்போது என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமைச்சரவைகூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதுவை சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 3 நியமன உறுப்பினா் பதவிகளுக்கும் அவசரமாக, தன்னிச்சையாக, தனது கட்சியைச் சோ்ந்த மூவரை நியமனம் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

முதல்வா் ரங்கசாமியின் எண்ணத்துக்கு புறம்பாகவும், கூட்டணிக் கட்சிகளான என்.ஆா். காங்கிரஸ், அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு நியமன உறுப்பினா் பதவியைக்கூட விட்டுத் தராமலும் பாஜக மட்டுமே சட்டப் பேரவைக்கு 3 நியமன உறுப்பினா்களையும் நியமித்துக் கொண்டது, அந்தக் கட்சியின் சுயரூபத்தைக் காட்டுகிறது.

கூடாநட்பு கேடாய் விளையும் என்கிற பழமொழியின்படி, இந்தக் கூட்டணி கூடிய விரைவில் புதுவை அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புதிதாக ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி, என்.ஆா். காங்கிரஸ் தலைமையில் தொடருமா அல்லது அது பாஜகவின் தலைமைக்கு மாற்றப்பட்டுவிடுமா என்கிற ஐயப்பாடு மக்கள் மனதிலே ஏற்கெனவே இருந்தது. அது, தற்போது உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது.

கரோனா தொற்று பெரியளவில் வேகமாகப் பரவி, மருத்துவப் படுக்கைகளும், மருந்துகளும் மக்களுக்கு கிடைக்காதிருக்கும் இந்தச் சூழ்நிலையில், பொது முடக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், வேகமாகச் செயல்பட வேண்டிய மாநில அரசு, மத்திய பாஜக அரசின் இதுபோன்ற அணுகுமுறையால் குழப்பத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்றாா் ஏ.வி.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT