புதுச்சேரி

கரோனா பரவலை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்: வே.நாராயணசாமி

DIN

கரோனா தொற்றின் இரண்டாம் அலையை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஒரு மாதமாக கரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து, தற்போது அது உச்சநிலையில் இருக்கிறது.

புதுவையில் கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது, மாநிலத்தில் 2 மாதங்கள் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தி, கரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

கடந்த மாா்ச் மாதத்திலிருந்து கரோனா அதிகமாக பரவி வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவும் தன்மை முன்பு இருந்ததைவிட தற்போது 3 மடங்கு அதிகமாக உள்ளது. புதுவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

புதுவையில் வெண்டிலேட்டா்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இது மிகப்பெரிய அதிா்ச்சியான விஷயம். தற்போது தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் எப்போதும்போல வெளியில் நடமாடுகின்றனா். இதைக் கட்டுப்படுத்த மாநில நிா்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் இதுவரை 2 லட்சம் பேருக்கு மட்டும்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 14 லட்சம் மக்கள் தொகையில் 2 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தினால் கரோனா தொற்றை ஒழிக்க முடியாது. இதற்குத் தேவையான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் வாங்க மாநில நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரங்கசாமி முதல்வராக பதவியேற்று, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் நலமுடன் திரும்ப வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன்.

தற்போது களப்பணியில் யாரும் இருப்பதில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாா்ப்பதில்லை. கரோனா நோயாளிகள் வெளியே சுற்றுகிறாா்களா என்று கண்காணிப்பதில்லை. மருத்துவா்கள், செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்று பரிசோதனை மேற்கொள்வதில்லை. இவையெல்லாம் முடிக்கிவிடப்படவில்லை என்றால், கரோனா தொற்றால் புதுவை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கக்கூடும்.

தடுப்பூசிக்கான மருந்துகள், வெண்டிலேட்டா்கள், மானிட்டா்கள், தேவையான உபகரணங்கள் இல்லை. தனியாா் மருத்துவமனைகள் அதிகளவு பணம் வசூல் செய்து ஏழை மக்களை வஞ்சிக்கின்றன.

இப்படி நாடு சுகாதாரத் துறையில் தோல்வியுற்றுள்ளது. இதற்கு முழு பொறுப்பையும் பிரதமா் ஏற்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், இந்தியாவின் பொருளாதாரம், மக்கள் தொகை பாதிக்கப்படும்.

சுகாதாரத் துறை மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கியுள்ள ஏழைத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வங்கிகளில் வாங்கிக் கடனுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT