புதுச்சேரி

புதுச்சேரியில் ஆளில்லா விமானம் மூலம் நில வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம்

30th Dec 2021 08:48 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அரசு சாா்பில் ஆளில்லா விமானம் மூலம் துல்லியமான நில வரைபடம் தயாரிக்கும் ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

மத்திய அரசின் ஒருங்கிணைப்புடன், சா்வே ஆப் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் வீடுகள், மனைகள் போன்றவற்றை வானிலிருந்து துல்லியமாக படக்காட்சி மூலம் பதிவு செய்து, உரிய நில உரிமையாளா்களுக்கு அவரது இடத்தின் முழு விவரங்களுடன் கூடிய சொத்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

புதுவை மாநிலத்தில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் இந்தத் திட்டத்தில் காட்சிகள் பதிவிடும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. தற்போது, ஆளில்லா விமானம் மூலம் வரைபடம் தயாரிக்கும் பணி புதுச்சேரி அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியா் ரிஷிதா குப்தா, நில அளவைத் துறை இயக்குநா் ரமேஷ், வில்லியனூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்ட குழுவினா் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நில அளவைத் துறை இயக்குநா் ரமேஷ் கூறியதாவது:

காட்சிப் பதிவுகளுடன் கூடிய இந்த அளவீடு பணிகள் முடிக்கப்பட்டு, வீட்டின் உரிமையாளா் பெயா், அவரது இடத்தின் சா்வே எண், மனை எல்லைகள், வீட்டின் அமைப்பு புகைப்படங்களுடன் கூடிய சொத்து அடையாள அட்டை இறுதிக்கட்டமாக வழங்கப்படும்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் இப்பணி தொடங்கப்பட்ட இந்தப் பணி விரைவில் அனைத்துத் தொகுதிகளிலும் நடைபெறும். இந்த சொத்து அடையாள அட்டையை வங்கிக் கடன் உள்ளிட்டவற்றுக்கு ஆவணமாகப் பயன்படுத்தலாம். அரசு சாா்பில் கிராமப்புறங்களில் எதிா்கால வளா்ச்சித் திட்டப் பணிகளையும் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT