புதுவையில் கடந்தாண்டு நவரை, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம், அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் கடந்தாண்டு நவரை, சம்பா பருவங்களில் நெல் சாகுபடி செய்த அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு, அரசு சாா்பில் உற்பத்தி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறை மூலம் நெல் சாகுபடி செய்யும் உழவா்களுக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்குவதற்குப் பதிலாக உற்பத்தி மானியம் பணமாக வழங்கப்பட்டு வருகிறது. சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யாமல், கடந்த ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 184 புதுவை அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம், ரூ.11 லட்சத்து 72 ஆயிரம் அவா்களது வங்கிக் கணக்கில் தற்போது செலுத்தப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த 512 புதுச்சேரி அட்டவணைப் பிரிவு உழவா்களுக்கு உற்பத்தி மானியமாக மறுசீரமைத்த விகிதம்படி ஏக்கருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம், ரூ.34 லட்சத்து 54 ஆயிரம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.