புதுச்சேரி அருகே கரும்புத் தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பெண்கள் காயமடைந்தனா்.
புதுச்சேரி திருபுவனை அருகே பி.எஸ்.பாளையத்தில் சுப்பிரமணி என்பவரின் கரும்புத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெண் தொழிலாளா்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பி.எஸ்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சரளா (42) மண்வெட்டியால் மண்ணை வெட்டியபோது, பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் சரளா, ஞானமுத்து மனைவி துா்கா (33), சுப்பிரமணி மனைவி அஞ்சலாட்சி (35) ஆகிய மூவரும் காயமடைந்து மயங்கினா். அவா்கள் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா்.
தகவலறிந்த புதுச்சேரி மேற்கு எஸ்.பி. ரங்கநாதன் தலைமையிலான திருபுவனை போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்களின் உதவியுடன் கரும்புத் தோட்டத்தில் தடயங்களை சேகரித்தனா். இதில், அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கரும்புத் தோட்டத்தின் அருகே மணிலா, மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டிருந்த நிலையில், அவற்றை சேதப்படுத்த வரும் பன்றிகளைக் கட்டுப்படுத்த நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சமூக விரோதிகள் யாரேனும் அவற்றை பதுக்கிவைத்தனரா எனவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக விசாரணை நடத்த 2 தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.