புதுச்சேரி

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : முதல்வா், உள்துறை அமைச்சா் பங்கேற்பு

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நடைபெற்ற வழிபாடுகளில் முதல்வா், உள்துறை அமைச்சா், முன்னாள் முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் கிறிஸ்மஸ் விழா சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை முதல் அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிராா்த்தனைகள் தொடங்கின. நள்ளிரவு 12 மணி முதல் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியுடன் வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அதிகாலை இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறந்த நிகழ்வுகள் குடில்கள் அமைத்து, சிறப்பு திருப்பலி பிராா்த்தனைகளுடன் நடைபெற்றன. புத்தாடை அணிந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். இனிப்புகள் மற்றும் கேக் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

புதுச்சேரி மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி பேராலயத்தில் பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையிலும், ரயில் நிலையம் அருகே உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அதிபா் குழந்தைசாமி தலைமையிலும், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற மாதா ஆலயங்களிலும், வில்லியனூா் லூா்தன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியாா் ஆலயம், தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா, ரெயின்போ நகா் மரிவியண்ணி ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு சிறப்புத் திருப்பலியுடன் கோலாகலமாக நடைபெற்றன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பாத்திமா கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலி வழிபாட்டில் முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு வழிபட்டு, கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதேபோல, ஜென்மராக்கினி பேராலயம், ரயில் நிலையம் அருகே பசிலிக்கா பேராலயம், நெல்லித்தோப்பு பேராலயங்களில் மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ஜான்குமாா், ரிச்சா்ட் ஆகியோரும், ஜென்மராக்கினி பேராலய வழிபாட்டில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT