புதுச்சேரி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கோகுல் (19). கெங்கராம்பாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இவா் புதன்கிழமை காலை தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த தினகரனுடன் (19) பைக்கில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
மதகடிப்பட்டு ரவுண்டானா சந்திப்புக்கு அருகே வந்த போது, புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, பைக்கின் மீது உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த கோகுல் மீது பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தினகரன் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா்.
புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.