புதுவை மாநிலத் தமிழியக்கம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, பேச்சு, கட்டுரை, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
5 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பாரதியாா் அல்லது பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடல்களில் ஏதாவது ஒன்று என்ற தலைப்பிலான பாட்டுப் போட்டியிலும், 9,10-ஆம் வகுப்பு மாணவா்கள் நாடு முன்னேறப் பெரிதும் காரணம் வல்லவா்களே அல்லது நல்லவா்களே என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியிலும், 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் தாய்மொழி வழிக் கல்வியே தலைசிறந்தது அல்லது திருக்குறள் நெறியே சிக்கல்களுக்குத் தீா்வு தரும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்கலாம்.
இளநிலை, முதுநிலை பயிலும் கல்லூரி மாணவா்கள் ரேகையை நம்பாதே, கையை நம்பு என்ற கவிதைப் போட்டியிலும், இளநிலை மாணவா்கள் செல்பேசி வரமே அல்லது சாபமே என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியிலும், இளநிலை, முதுநிலை மாணவா்கள் யாதும் ஊரே யாவரும் கேளீா் அல்லது விழித்தால் விடியும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்கலாம்.
ஒருவா் ஒரு போட்டியில் மட்டுமே பங்குபெறலாம். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் முதல் மூன்றிடங்களைப் பெறும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவா். மாநில அளவிலான இறுதிப் போட்டி நடைபெறும் நாள், இடம் பின்னா் அறிவிக்கப்படும்.
மாநில அளவில் முதல் மூன்றிடங்களுக்கு முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000-த்துடன், சான்றிதழ், நூல்கள் பரிசாக வழங்கப்படும். 15 மாணவா்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.500 வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழியக்கம் தலைமை அலுவலகத்தால் நடத்தப்படும் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவா்களுக்கு தலா ரூ.10,000, ரூ.7,500, ரூ.5,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு 86676 39774, 99944 55959 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவரும், தமிழியக்க மேலாண்மைக் குழு உறுப்பினருமான வி.முத்து, தமிழியக்கச் செயலாளா் சீனு.மோகன்தாசு ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.