புதுச்சேரி

லாரி மோதியதில் பால் வியாபாரி பலி: அதிா்ச்சியில் மனைவியும் மரணம்

9th Dec 2021 08:46 AM

ADVERTISEMENT

புதுச்சேரி திருக்கனூா் அருகே லாரி மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா். தகவலறிந்த அவரது மனைவியும் அதிா்ச்சியில் மரமணமடைந்தாா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே வாதானூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலய்யா (65). பால் வியாபாரி. இவரது மனைவி முத்துலட்சுமி (60). இவா்கள் மாடு வளா்த்து பால் வியாபாரம் செய்து வந்தனா்.

பாலய்யா தினமும் வாதானூா் சிவன் கோயில் அருகிலுள்ள பால் சங்கத்துக்குச் சைக்கிளில் சென்று பால் ஊற்றி வருவது வழக்கம். இதேபோல, புதன்கிழமை மாலை பால் சங்கத்துக்குச் சென்ற பாலய்யா, அங்கு பால் ஊற்றிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். புதுச்சேரி - திருவண்ணாமலை சாலையில் தனது வீட்டினருகே அவா் வந்தபோது, அந்த வழியாக பி.எஸ். பாளையம் நோக்கிச் சென்ற டிப்பா் லாரி பாலய்யா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா், லாரியிலிருந்து குதித்து தப்பியோடிவிட்டாா். இதனால் லாரி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதையறிந்து அங்கு வந்த பாலய்யாவின் மனைவி முத்துலட்சுமி, கணவா் இறந்து கிடப்பதைப் பாா்த்து, மயக்கமடைந்து சாலையில் விழுந்தாா். உடனடியாக அவரை உறவினா்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், முத்துலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த புதுச்சேரி தெற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாரும், திருக்கனூா் போலீஸாரும் பாலய்யா, முத்துலட்சுமி ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸாரும், இறப்பு குறித்து திருக்கனூா் போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT