புதுச்சேரி

ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மறியல்

9th Dec 2021 08:47 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட பி.எஸ்.பாளையம் களத்துமேடு பகுதியில் இருளா் சமுதாயத்தினருக்கு வருவாய்த் துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்தப் பகுதி மக்கள் சிலா் அருகே தமிழகப் பகுதிக்குச் செல்லும் ஏரி வாய்க்காலையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, மழைநீா் வடிகால் வசதியின்றி, பி.எஸ்.பாளையம் கிராமத்துக்குள் மழைநீா் புகுவதால் பயிா்களும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்படுன்றன. இதனால், பி.எஸ்.பாளையம் பகுதியில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்ற வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள், விவசாயிகள் புதன்கிழமை திரண்டு, திருக்கனூா் - மதகடிப்பட்டு சாலையில் பி.எஸ்.பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மரங்களால் தடுப்புக் கட்டைகளைக் கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வில்லியனூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன் மற்றும் திருபுவனை போலீஸாா் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், மறியலில் ஈடுபட்டிருந்தவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தச் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT