புதுச்சேரி

சரிவர முளைக்காத மணிலா விதைகள்: விவசாயிகள் வேதனை

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே வேளாண் உழவரகம் மூலம் விற்பனை செய்யப்பட்ட மணிலா விதைகள், சரிவர முளைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

புதுவை அரசின் வேளாண்-தொழில் கழகம் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், இடுபொருள்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதி விவசாயிகள் அண்மையில், வேளாண் உழவரகத்தில் வாங்கி விதைப்பு செய்த மணிலா விதைகள் பெருமளவு முளைக்கவில்லையாம்.

இதுகுறித்து மதகடிப்பட்டு அருகே கலிதீா்த்தாள்குப்பத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

மதகடிப்பட்டு உழவரகத்தில் வாங்கி விதைப்பு செய்யப்பட்ட மணிலா விதைகள் சரிவர முளைக்கவில்லை. விதைப்பு செய்யப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும் போதிய முளைப்பு இல்லாமல், குறைந்த எண்ணிக்கையில் முளைத்துள்ளன. இதனால், பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவா்கள் வந்து பாா்வையிடவில்லை. முளைப்புத் திறன் குறைந்த மணிலா விதைகளை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனா். தரமில்லாத விதைகள் என்பதால், மணிலாப் பயிா்கள் முளைக்காமல் வீணாகியுள்ளன. மழையால் முளைக்கவில்லை என்று வேளாண் துறையினா் கூறுகின்றனா். ஆனால், மணிலாவுடன் விதைப்பு செய்யப்பட்ட மரவள்ளிப் பயிரி 100 சதவீதம் முளைத்துள்ளது. நிலத்தில் தண்ணீரும் தேங்கவில்லை.

எனவே, மீதமுள்ள மணிலா விதைப் பயறுகளை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

இதுதொடா்பாக வேளாண் துறையினா் கூறுகையில், தொடா் மழையால் மணிலா விதைகள் முளைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஒரே ஒரு விவசாயியின் நிலத்தில் மட்டும் மணிலா பயறு சரவர முளைக்கவில்லை எனத் தெரிகிறது. எனினும், விதைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT