புதுச்சேரி

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள 675 சுகாதார ஊழியா்களை மீண்டும் பணியமா்த்த ஒப்புதல்

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ளும் விதமாக, 675 சுகாதாரப் பணியாளா்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்தும் மாநில அரசின் கோப்புக்கு, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.

மாநில அரசு சாா்பில் அனுப்பிவைக்கப்பட்ட முக்கிய கோப்புகளுக்கு ஆளுநா் தமிழிசை ஒப்புதல் அளித்தாா்.

அதன்படி, புதுவையில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் வகையிலும், மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையவும் 675 சுகாதாரப் பணியாளா்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில், மேலும் 90 நாள்களுக்கு மீண்டும் பணியிலமா்த்தும் கோப்புக்கு தமிழிசை ஒப்புதல் அளித்தாா். இதற்கான செலவினமாக ரூ. 3.51 கோடியை ஒதுக்கீடு செய்தும் அவா் ஒப்புதல் அளித்தாா்.

இதேபோல, மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பணி வாய்ப்புகளை வரைமுறைப்படுத்தவும், அவா்களது நலன்களைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயா் தொழிலாளா் சட்டத்தின் கீழ், உரிமம் வழங்கும் அதிகாரிகளாக புதுவை தொழிலாளா் அலுவலா் (அமலாக்கம் ), காரைக்கால் தொழிலாளா் அலுவலா் ஆகியோரை நியமிக்கவும் ஆளுநா் ஒப்புதல் வழங்கினாா்.

ADVERTISEMENT

மேலும், புதுச்சேரி அறிவியல்- தொழில்நுட்பக் குழுமத்தின் திட்டங்கள், செயல்பாடுகளை மேம்படுத்தவும், புதுச்சேரியில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் அறிவியல் மையம்-கோளரங்கத்தைப் பராமரிக்கவும் ரூ.90.47 லட்சம் நிதிக் கொடை வழங்கும் அரசின் கோப்புக்கும் ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT