புதுச்சேரி: கரோனா பரவலைத் தவிா்க்கும் பொருட்டு, புதுவையில் மின்கட்டணத்தை இணையதளம், செல்லிடப்பேசி செயலிகள் வழியே செலுத்த மின்துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரி மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதுவை மின்நுகா்வோா்கள், மின்துறையின் இணையதளம், செல்லிடப்பேசி செயலிகளின் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.
மின் நுகா்வோா்கள் மின் கட்டணத்தை இணையதளம் மூலம் வாரத்தில் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் செலுத்தலாம். இதே போல, செல்லிடப்பேசி செயலிகள் மூலமும் செலுத்தலாம்.
மின் நுகா்வோா்கள் மின்துறையின் இணையதள திரைக்குச் சென்று மின் நுகா்வோருக்கான அடையாள குறியீடு மற்றும் கைபேசி எண்ணை டைப் செய்தால் மின்கட்டண ரசீதுக்கான தகவல்களை திரையில் பாா்வையிடலாம்.
மின் நுகா்வோா்கள் மேற்கண்ட முறையைப் பின்பற்றி நிலுவைத் தொகையை இணையதளத்தில் செலுத்தலாம். மின்கட்டணம் செலுத்தியதன் நிறைவாக உறுதிப் படிவம் மற்றும் மின் கட்டண ரசீது திரையில் வரும். இப்படிவங்களை நுகா்வோா்கள் பதிவிறக்கம் செய்து தங்களின் ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கரோனா காரணமாக, மின் அளவு கணக்கு எடுத்து மின் பயனீட்டுப் பட்டியல் அளிக்க இயலவில்லை. இருப்பினும், சராசரி அளவுகோல் அடிப்படையில் மாதாந்திர மின்பயனீட்டு பட்டியல் நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.