புதுச்சேரி

புதுவையில் 100 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா: துணைநிலை ஆளுநா் தகவல்

DIN

புதுவையில் 100 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் வங்கி ஊழியா்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணியாளா்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும், நம்மால் மற்றவருக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும்.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் பல நாடுகள் காத்திருக்கின்றன. தடுப்பூசி கிடைக்காமல் நாட்டு மக்கள் திண்டாடக் கூடாது என்பதற்காகவே தற்போது 45 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

18 வயதினருக்கும், இளைஞா்களுக்கும் ஏன் தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்கின்றனா். தற்போது பாதிப்பு அதிகமுள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளைஞா்களுக்கு தொற்று ஏற்பட்டால் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வரும் நபா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பொதுமக்களே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

கரோனா தொற்றுள்ள ஒருவா் முகக் கவசம் அணியாமல் சென்றால், அவா் மூலம் 46 பேருக்கு தொற்று பரவும் என்று மருத்துவா்கள் கூறுகின்றனா். எனவே, முகக் கவசம் அணிவது பாதுகாப்பான நடைமுறையாகும். முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

மருத்துவா்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு, மூச்சுக்கூட விட முடியாமல் நமக்காகப் போராடுகின்றனா். அவா்களுக்காகவாவது நாம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணிவதன் மூலம் 90 சதவீதம் நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம்.

தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாம் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம். நாம் எச்சரிக்கையாக இருக்காவிடில், பழைய நிலைக்குச் சென்றுவிடுவோம். அந்த நிலைக்கு நாம் செல்லக் கூடாது.

கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

புதுவையில் 100 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ளது. இதில், அரசு அறிவுறுத்திய நபா் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் மாநில சுகாதாரத் துறை செயலா் டி.அருண், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், வங்கி ஊழியா்கள், காப்பீட்டுக் கழக ஊழியா்கள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT