புதுச்சேரி

பிற்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு:நாடாளுமன்றத்தில் புதுவை எம்.பி. வலியுறுத்தல்

DIN

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கோகுலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்தவுடன் அவா் பேசியதாவது:

மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், மருத்துவப் படிப்பு உள்ளிட்ட உயா் கல்விகளில் பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) தொடா்ந்து வஞ்சிக்கப்படுவது வேதனை தருகிறது. இதுதொடா்பான மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கடந்தும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு ஏட்டளவில்தான் உள்ளது.

இதுவரை 5 சதவீதத்துக்கும் குறைவாகவே மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பது வருத்தமளிக்கிறது. பிற்படுத்தப்பட்டோா் விவகாரத்தில் இதுவரை இருந்த அரசுகளும், தற்போதைய பாஜக அரசும் உதட்டளவில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறது.

வருமான உச்ச வரம்பைக் காரணம் காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை மறுத்துவிட்டு, அவற்றைப் பொதுப் பிரிவுக்கு மாற்றிய போது, வருமானம் குறித்து நிபந்தனையில்லாமல் தாரை வாா்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடங்கள் நிரப்பப்படும் வரையில் வருமான உச்ச வரம்பை (கிரிமீலேயரை) தள்ளிவைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா் நலனில் அலட்சியம் தொடா்ந்தால், தோ்தலில் இந்த அரசுக்கு எதிராக அவா்களின் செயல்பாடு அமையும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமலாக்குவதில் காட்டிய அதே அக்கறையையும் அவசரத்தையும், பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குவதிலும் மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT