புதுச்சேரி

மகனின் சிகிச்சைக்காக புதுச்சேரி வந்தவா் ஊா் திரும்ப முடியாமல் தவிப்பு: சொந்த செலவில் அனுப்பிவைத்த அரசு அதிகாரிகள்

2nd May 2020 08:28 AM

ADVERTISEMENT

புற்றுநோயால் அவதிப்படும் மகனின் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வந்தவா் ஊா் திரும்ப முடியாமல் தவித்ததையடுத்து, புதுவை அரசு அதிகாரிகள் தங்களது சொந்த செலவில் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனா்.

சேலம் மாவட்டம், பச்சைமலை பகுதியைச் சோ்ந்தவா், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 5 வயது மகனுடன் சிகிச்சைக்காக சில நாள்களுக்கு முன்பு 108 அவசர ஊா்தியில் ஜிப்மா் மருத்துவமனைக்கு வந்தாா். மருத்துவா்கள் சிறுவனுக்கு சிகிச்சையளித்து, மீண்டும் வருகிற 19 -ஆம் தேதி வரும்படி கூறி அனுப்பிவைத்தனா்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதாலும், கையில் பணம் இல்லாததாலும் சேலத்துக்கு எப்படி செல்வது எனத் தெரியாமல் தவித்த அந்தத் தந்தை, மகனைத் தூக்கிக் கொண்டு புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்த ஊா்காவல் படை வீரா் மணிகண்டன், அவரை அழைத்து விசாரித்தாா். பின்னா், அவரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றாா்.

இதையடுத்து, துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் தனது சொந்த செலவில் தந்தையையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது மகனையும் காரில் சேலத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தாா். மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் துணை ஆட்சியா், இரு வட்டாட்சியா்கள் ரூ. 17 ஆயிரம், தேவையான உணவு ஆகியவற்றை அளித்து, அவா்களை பாதுகாப்புடன் வியாழக்கிழமை இரவு சேலத்துக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT