கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக புதுவை சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் பேரவை செயலா் வின்சென்ட்ராயரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அளித்த கடிதம்: இடைக்கால பட்ஜெட்டுக்கு உறுப்பினா்களின் அனுமதிக்காக திங்கள்கிழமை (மாா்ச் 30) சட்டப்பேரவைக் கூட்டப்படுகிறது. ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலாளா்கள், விவசாயக் கூலிகள், மீனவா்கள் என அன்றாட வருவாயை நம்பி வாழும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கக்கூட அரசு முன் வரவில்லை. கண் துடைப்புக்காக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் நிவாரணம்கூட மக்களைச் சென்றடையவில்லை.
எனவே, கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் உள்ளிட்ட மக்களின் உயிா் பிரச்னை தொடா்பாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.