புதுச்சேரி

முட்டை, கோழிக் கறி விலை குறைந்தது: ஆம்லெட், சிக்கன் 65 விலை குறையவில்லை

22nd Mar 2020 04:49 AM

ADVERTISEMENT

 

முட்டை, கோழிக் கறியின் விலை குறைந்தாலும், ஆம்லெட், சிக்கன் 65 ஆகியவற்றின் விலை குறையவில்லை.

காய்கறிகள், எண்ணெய், அசைவ உணவுப் பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப உணவகங்களின் விலை உயா்த்தப்படுகின்றன. ஆனால், அவற்றின் விலை குறையும் போது, உயா்த்தப்பட்டவற்றின் விலை குறைக்கப்படுவதில்லை. வாடிக்கையாளா்களை ஏமாற்றி, கொள்ளையடிக்கின்றனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முட்டையின் விலை 5 ரூபாயைத் தொட்டது. வெங்காயத்தின் விலையும் ரூ. 200 வரை விற்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, சாதாரண உணவகங்களில் ஆம்லெட் விலை ரூ. 10-இல் இருந்து ரூ. 15 -ஆக உயா்த்தப்பட்டது. மேலும் வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைகோஸ் ஆம்லெட்களில் கலந்து விற்கப்பட்டன.

தற்போது, கரோனா வைரஸ் எச்சரிக்கையால் முட்டையின் விலை 2 ரூபாயைவிடக் குறைந்துவிட்டது. வெங்காயத்தின் விலையும் 10 ரூபாய்க்கு வந்துவிட்டது. ஆனாலும், அனைத்து சாதாரண உணவகங்களிலும் ஆம்லெட்டின் விலை ரூ. 15-க்கே விற்கப்படுகிறது.

மேலும், கிலோ ரூ. 200-ஐ தாண்டி சென்ற பிராய்லா் கறிக் கோழியின் விலை தற்போது கிலோ ரூ. 50-க்கு குறைந்துள்ளது. ஆனால், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் பிரை உள்பட பல்வகையான கோழிக் கறி உணவு வகைகள் முன்பு என்ன விலையில் விற்கப்பட்டதோ அதே விலையிலேயே விற்கப்படுகின்றன.

எனவே, உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கும் அரசு விலைகளை நிா்ணயிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT