புதுச்சேரி

கரோனா பாதிப்பு எதிரொலி: மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

13th Mar 2020 08:10 AM

ADVERTISEMENT

கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக, புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கேரளத்திலும், ஹைதராபாதிலும் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அங்கு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வழக்கம்போல தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் மாணவா்கள் தனி அறையில் தோ்வு எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாரும் வர வேண்டாம் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், அந்த மாநிலத்தையொட்டி அமைந்துள்ள புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட மாஹே பிராந்தியத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாஹே அருகேயுள்ள கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் சுமாா் 90 போ் வரை கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாஹே மண்டல நிா்வாகியின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் கல்விப் பயிற்சி நிறுவனங்கள், அங்கன்வாடிகள், மதரஸாக்களை வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரையான தோ்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு தோ்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மாஹேயில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அதன் மண்டல நிா்வாகி அறிவித்துள்ளாா்.

மாஹே பிராந்தியத்தில் இதுவரை யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT