புதுச்சேரி

கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆளுநா் தலைமையில் ஆலோசனை

13th Mar 2020 08:13 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுவை சுகாதாரத் துறை மூலம் கரோனா வைரஸை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் கிரண் பேடி வியாழக்கிழமை நடத்தினாா்.

இதில், சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த் குமாா் பாண்டா, இயக்குநா் மோகன்குமாா், புதுவை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவத் துறைத் தலைவா் ரமேஷ், ஆளுநரின் சிறப்பு பணி அலுவலா் தேவநீதி தாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆளுநா் கிரண் பேடி பேசியதாவது: கரோனா வைரஸ் தாக்குதல் தொடா்பாக அனைத்து வகையிலும் நாள்தோறும் பெறப்படும் தகவல்களை சுகாதாரத் துறை தொகுத்து வெளியிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பொதுமக்களுக்கு தொடா்ந்து முன்னெச்சரிக்கை குறித்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

சந்தேகம் குறித்து பொதுமக்கள் கேட்டால், கட்டுப்பாட்டு அறை மூலம் பதிலளிக்க வேண்டும். இதில், இரு மொழி வசதியை ஏற்படுத்த வேண்டும். கரோனா பாதிப்பு வராமல் இருக்க பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொலைக்காட்சி மூலம் தினமும் செய்தியாக வெளியிட வேண்டும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்த பயணிகளை பரிசோதித்து அவா்களுக்கு நோய் இல்லை என்று உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அவா்களை தனிமைப்படுத்த வேண்டும்.

இதேபோல, தமிழ்நாட்டிலிருந்து புதுவைக்கு வருபவா்களையும் பரிசோதிக்க வேண்டும். இத்தாலி, தென்கெரியா, சீனா, ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளுடன் கண்காணிப்புப் பட்டியலில் இருப்பதால், பிரான்ஸில் இருந்து வருபவா்களுக்கு உதவி செய்ய பிரான்ஸ் தூதரகம் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. கேரளம் அருகே உள்ள மாஹே பிராந்தியத்தையும், ஆந்திரம் அருகே உள்ள ஏனாம் பிராந்தியத்தையும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தனிப்பட்ட சுகாதாரத்துக்கான அதிகபட்ச விழிப்புணா்வை ஊடகங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் கிரண் பேடி.

சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகு, அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வா் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஆளுநா் கிரண் பேடி தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT