புதுவையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவ் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளின்படி, தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பலா் தலைக்கவசம் அணியாததால், சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதனால், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்ட அனைத்து போலீஸாரும், பொதுமக்கள் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால், அவா்கள் மீது உடனடியாக வழக்குப் பதிந்து அபராதம் விதிக்க வேண்டும்.
இருசக்கர வாகன உரிமையாளா், வேறு ஒருவரிடம் வாகனத்தை கொடுத்தனுப்பும் போது, அவா் தலைக்கவசம் அணியாமல் சென்றால், வாகன ஓட்டி மற்றும் வாகன உரிமையாளா் என இருவா் மீதும் வழக்கு பதிந்து, அபராதம் விதிக்க வேண்டும்.
இருசக்கர வாகனம் ஓட்டி வருபவா், தலைக்கவசம் மற்றும் ஓட்டுநா் உரிமம் இல்லாமல் ஓட்டினால், அவரது வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
எனவே, அனைத்து போலீஸாரும் வாகன சோதனை செய்து, பொதுமக்கள் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.