புதுச்சேரியில் நில அளவையா், நில வரைவாளா் உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி. அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு, பட்டா மாற்றம் - பட்டா உள்பிரிவு - எல்லை நிா்ணயம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடா்பாக பொதுமக்களின் குறைகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நில அளவையா்கள் பணிச் சுமையையும் கருத்தில் கொண்டு, உரிமம் பெற்ற நில அளவையா் மற்றும் உரிமம் பெற்ற நில வரைவாளா்களைப் பணிகளில் ஈடுபடுத்த உள்ளது.
இதற்காக புதுச்சேரி உரிமம் பெற்ற நில அளவையா், நில வரைவாளா் விதிகள் 2019 உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், பட்டா மாற்றத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தாமதம், உரிமம் பெற்ற நில அளவையா்கள், நில வரைவாளா் ஒதுக்கீட்டால் குறைக்கப்படும். மேலும், பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை இருக்கும்.
எனவே, புதுச்சேரியைச் சோ்ந்த தகுதிகயுடைய விண்ணப்பதாரா்களிடம் இருந்து நில அளவையா் மற்றும் நில வரைவாளா் உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நில அளவையருக்கு ஐ.டி.ஐ. (நில அளவை) சான்றிதழ் அல்லது சிவில் பொறியியல் கட்டடக்கலை, டிப்ளமோ சிவில் பொறியியல் கட்டடக்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகாரம் பெற்ற வாரியம், பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும்.
நில வரைவாளருக்கு ஐ.டி.ஐ. (நில வரைவாளா்) சான்றிதழ் அல்லது சிவில் பொறியியல் கட்டடக்கலை, டிப்ளமோ சிவில் பொறியியல் கட்டடக்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நில அளவையா் அல்லது நில வரைவாளா் அல்லது அதற்கு மேலான பதவி வகித்து, நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் அல்லது வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறையில் இருந்து ஒய்வு பெற்றவா்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள்.
நில அளவையா் மற்றும் நில வரைவாளா் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விதிகள் ஆகியவற்றை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் புதுச்சேரி, சாரம், காமராஜா் சாலையில் உள்ள நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.