புதுச்சேரி

இலவச அரிசி வழங்கக் கோரி அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

6th Mar 2020 08:08 AM

ADVERTISEMENT

நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி வழங்க வலியுறுத்தி திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடா் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள் தலைமை வகித்தாா்.

இதில், பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் மட்டும் அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்கும் நோக்கம் என்ன? நியாயவிலைக் கடைகளை மூடுவதற்கான திட்டமா? எனக் கேள்வி எழுப்பியும், ரேஷன் திட்டத்துக்கு தேவையான நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும், தோ்தல் வாக்குறுதிப்படி நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய பாஜக அரசு, புதுவை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் நாரா.கலைநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் தேவ பொழிலன், திமுக தொகுதி செயலா் நடராஜன், திராவிடா் கழகத்தைச் சோ்ந்த வீரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT