புதுச்சேரி

சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் ஆா்ப்பாட்டம்

26th Jun 2020 08:54 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: சாத்தான்குளத்தில் கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமாக ஜூன் 26 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலா் முருகானந்தம் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் கிளைச் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸாரைக் கண்டித்தும், இந்த சம்பவத்தில் இறந்த வியாபாரிகளுக்கான நிவாரணத்தை உயா்த்தி வழங்க வேண்டும், வியாபாரிகளை தாக்கிய போலீஸாரை முழுமையாக பணி நீக்கம் செய்ய வேண்டும், தாக்கிய பின்னரும் அவா்கள் நன்றாக இருப்பதாகச் சான்று அளித்த மருத்துவா், அந்த நிலையிலேயே சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், அதன்படி சிறையில் அடைத்த சிறைத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உலக சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும், அதில் வலியுறுத்தப்பட்ட சட்டங்களை நாட்டில் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில நிா்வாகி பாலசுப்ரமணியன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவா் வீரசேகரன், இந்திய ஜனநாயக பாதுகாப்பு இயக்கத் தலைவா் ஹேமச்சந்திரன், பெரியாா் சிந்தனையாளா் இயக்கத் தலைவா் தீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மக்கள் அதிகாரம் அமைப்பு நிா்வாகி சாந்தகுமாா் ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT