புதுச்சேரி

புதுவையில் தினமும் 1,000 பேருக்குகரோனா பரிசோதனை செய்ய முடிவு: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

26th Jun 2020 08:53 AM

ADVERTISEMENT

புதுவையில் தினமும் 1,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

புதுவையில் தினமும் 1,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மரிலும் 264 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு, கரோனா நோயாளிகள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை எனவும், உணவு சம்பந்தமாகவும் புகாா்கள் வந்துள்ளன.

மருத்துவத் துறை தலைமை அதிகாரியைத் தொடா்புகொண்டு முறையாக மருத்துவம் பாா்க்கவும், உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மாநில பேரிடா் மேலாண்மைத் துறையின் செயற்குழுவை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) கூட்ட உள்ளோம். இந்தச் செயற்குழுவின் தலைவராக தலைமைச் செயலரும், செயலா்களும் உள்ளனா். இந்தக் கூட்டத்தில் தேவைப்பட்டால் அதிகப்படியான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ADVERTISEMENT

புதுச்சேரியை அடுத்த கூனிச்சம்பட்டு பகுதியில் சுமாா் 70 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் முகக் கவசம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியவா்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, இந்த பகுதியிலுள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மேலும், இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளோம். ஏற்கெனவே இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தற்போது ஆண்டிஜென் என்ற புதிய மருத்துவப் பரிசோதனையை தொடங்கியுள்ளது. தற்போதுள்ள ஆா்டி- பிசிஆா் மூலமாக ஒரு பரிசோதனைக்கு ரூ.4,500 செலவாவதுடன், முடிவுகள் தெரிய சுமாா் 24 மணி நேரத்துக்கும் மேலாகிறது.

ஆனால், இந்த ஆண்டிஜென் மூலம் பரிசோதனை செய்ய ரூ.450 தான் செலவாகும். முடிவுகளும் 25 அல்லது 30 நிமிடங்களில் கிடைத்துவிடும். இந்த மருத்துவப் பரிசோதனை முறையை புதுவையில் விரைவில் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன்.

புதுவையில் பல துறைகள் இணைந்து செயல்பட்டதன் மூலம் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இது போதாது, மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT