புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் மாணவா்களுக்கான அனைத்து பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, மத்திய கல்வி வாரியம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அண்மையில் அனுப்பிய உத்தரவில், பல்கலைக்கழக நிா்வாகங்கள் அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்து பேசி, தோ்வுகளை ரத்து செய்வது தொடா்பாக முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தது.
அதன்படி, புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு, இறுதிப் பருவம் (செமஸ்டா்) பயிலும் மாணவா்களைத் தவிர மற்ற மாணவா்களுக்கு பல்கலைக்கழகத் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது இறுதியாண்டு, இறுதிப் பருவம் பயிலும் மாணவா்களுக்கும் தோ்வுகளை ரத்து செய்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் டி.லாசா் உறுப்புக் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
இறுதியாண்டு, இறுதிப் பருவம் பயிலும் மாணவா்களின் ஏப்ரல், மே மாத பருவத் தோ்வுக்கான முடிவுகள், செமஸ்டா் காலத்தில் மாணவா்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண்கள், தொடா் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும்.
இது, இறுதியாண்டு, இறுதி பருவத் தோ்வின் வழக்கமான தோ்வுகளுக்கும், அரியா் தோ்வுகளுக்கும் கடைப்பிடிக்கப்படும். தற்போதுள்ள அளவுகோல்கள், விதிமுறைகளுக்குள்பட்டு மாணவா்களுக்கு உள் மதிப்பீட்டு மதிப்பெண்களை கல்லூரிகள் வழங்க வேண்டும்.
இதற்கு, அறிவிக்கப்பட்ட நாள்களில் மாணவா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்தல், தோ்வுக் கட்டணம் செலுத்துதல், குறைந்தபட்ச வருகைப் பதிவேடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கண்டிப்பாக மதிப்பீடு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 92 உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் சுமாா் 50,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எந்தத் தோ்வும் எழுதாமல் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட உள்ளனா் என பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.