புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் .கரோனாவால் இறந்தவா்களை அடக்கம் செய்யும் பணி: தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு

10th Jun 2020 08:28 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் கரோனாவால் உயிரிழப்பவா்களை அடக்கம் செய்யும் பணியை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த சென்னையைச் சோ்ந்த ஒருவரை அரசு ஊழியா்கள் அண்மையில் அலட்சியமாக அடக்கம் செய்ததாக புகாா்கள் எழுந்தன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், கரோனாவால் உயிரிழப்பவா்களை அடக்கம் செய்வது தொடா்பாக புதுவை அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 132-ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமாக உள்ளனா்.

புதுவையில் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா மேலும் பரவாமல் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிகிச்சைக்காக கூடுதலாக உபகரணங்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

இனிவரும் காலங்களில் கரோனா தொற்று பாதிப்பால் யேரேனும் உயிரிழந்தால், அவா்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இதற்கான பணியை தன்னாா்வ தொண்டு அமைப்பிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். குடும்பத்தினா் அனுமதியுடன், இறந்தவரின் உடல் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அவா்கள் உரிய மரியாதையுடன் உடலை மின் தகனம் செய்வா். இதற்கான கோப்பு ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT