தமிழக டிஎஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுவை முன்னாள் அமைச்சா் கல்யாணசுந்தரம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அரியூா் உஷா வீதியை சோ்ந்தவா் கண்ணபிரான் (45). இவா், மயிலம் தமிழ்நாடு காவலா் பயிற்சிப் பள்ளியில் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வருகிறாா். இவருடைய மைத்துனா் புதுவை முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரம். உறவினா்களான இவா்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது கண்ணபிரான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், சனிக்கிழமை கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோா் கண்ணபிரான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கண்ணபிரானை அவா்கள் அவதூறாகப் பேசி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஎஸ்பி கண்ணபிரான், புதுச்சேரி வில்லியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், முன்னாள் அமைச்சா் கல்யாணசுந்தரம், அவரது மனைவி, சகோதரா்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.