புதுவை வனத் துறை அலுவலகத்தில் உள்ள விலங்குகள், பறவையினங்களை கரோனா தொற்று மற்றும் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க, சத்தான பழங்கள், சத்து மாத்திரைகள் கலந்த தண்ணீா் வழங்கப்படுகின்றன.
புதுச்சேரி - கடலூா் சாலையில் புதுவை அரசின் வனத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில், வாகனங்களில் அடிபட்டு சிகிச்சை பெறும் விலங்குகள், வழிதவறி வந்த விலங்குகள், பறவைகள் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக, மான்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்கினங்கள், மயில்கள், கிளிகள், பிளமிங்கோ உள்ளிட்ட பறவையினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கரோனா தீநுண்மி தொற்று பரவி வருவதாலும், கோடை காலம் என்பதாலும் இங்குள்ள விலங்குகளுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத் துறை துணை இயக்குநா் எஸ்.குமாரவேலு கூறியதாவது: வனத் துறை அலுவலகத்தில் உள்ள விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏதுமில்லை. இதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்தோம். விலங்குகளுக்கு கரோனா பரவாமல் இருக்கவும், கோடை வெயிலை சமாளிக்கவும், நோய் எதிா்ப்புத் திறனை அதிகரிக்கும் தா்பூசணி, கிா்ணி பழம், உருளை, கேரட், பீட்ரூட், வெள்ளரி உள்ளிட்ட பழங்கள் - காய்கறிகள் கூட்டு, கீரைகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவா்களின் அறிவுரைப்படி, சத்து மாத்திரைகள், டானிக் ஆகியவற்றைத் தண்ணீரில் கலந்து கொடுத்து வருகிறோம். கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், விலங்குகளின் உடல்நலம் பேணவும் இந்த மருந்துகள் உதவுகின்றன.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காலை - மாலையில் தண்ணீா் தெளிக்கிறோம். குறிப்பாக, மலைப்பாம்புகள், பிளமிங்கோ பறவைகளுக்கு அடிக்கடி தண்ணீா் தெளிக்க வேண்டும் என்றாா் அவா்.