மத்திய அரசு ஏதோ புதிதாக நிதியை வழங்கிய போல, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மாயையை உருவாக்குகிறாா் என்று முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
புதுவைக்கு 3 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 247.75 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா். இந்தத் தொகையைக் கொண்டு மே மாதத்துக்கான ரிசா்வ் வங்கியில் வாங்கிய கடனை அடைத்தோம். ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்படும் இழப்பீடுகளை 5 ஆண்டுகள் வரை வழங்குவதாக மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியைத்தான் மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஏதோ மாநிலத்துக்கு புதிதாக நிதியை வழங்கியது போல, ஒரு மாயையை ஆளுநா் உருவாக்கக் கூடாது.
புதுவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். இதற்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் சட்டப்பேரவைக் கூட்டப்படும்.
தொழில், வா்த்தக அமைப்புகள், விவசாயச் சங்கங்கள் உள்ளிட்டோா் தங்களது கருத்துகளைக் கடிதமாக அளிக்கலாம். அந்தக் கருத்துகள் பரிசீலிக்கப்படும். கரோனா பரவலைத் தடுத்து, மக்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்க எந்த அளவுக்கு நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.